close

Kuru Aravinthan | (page 4 of 61)

home

Kuru Aravinthan

இது உங்களுக்கான வலைப்பூ... எல்லை இல்லா வானத்தில் சிட்டுக் குருவிகளாய் சிறகடிப்போம் வாருங்கள், உங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள்

tamilaram.blogspot.com

Female Space Walk - விண்வெளியில் நடைபயிலும் பெண்கள்

                                விண்வெளியில் நடைபயிலும் பெண்கள்
                                   
                                   
                                                          Female Space Walk   

Female Space Walk - விண்வெளியில் நடைபயிலும் பெண்கள்

யார் அந்த தேவதை? - Valentine Story

LOVE STORY: kuruaravinthan@hotmail.com

யார் அந்த தேவதை?


யார் அந்த தேவதை? - Valentine Story
குரு அரவிந்தன்


'சூரியா, அந்தப் பெண்ணைப் பார்த்தியா?'

தாய் சாரதா சொன்னதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலட்சியமாய் தெருவில் பார்வையைச் செலுத்தினான் சூரியா.

அப்பாவிற்கு கோயில், குளங்களுக்குப் போவதில் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. அதனாலே என்ன தான் தலை போகிற காரியமாய் இருந்தாலும் வெள்ளிக் கிழமைகளில் தாயைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதில் சூரியா தவறுவதில்லை.

அதைத் தன்னுடைய கடமையாகவே கருதிச் செய்தான். இன்றும் அப்படித்தான் கோயிலுக்குப் போய்விட்டு ஸ்கூட்டரில் இருவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

அம்மாவின் தொல்லை கொஞ்ச நாளாய் தாங்க முடியாமல் போய்விட்டது. தங்கை திருமணம் செய்து புகுந்த வீட்டிற்குப் போய்விட்டதால் இவன் தனித்துப்போய் அம்மாவிடம் வசமாய் மாட்டிக் கொண்டான்.

எப்படியாவது காலாகாலத்திற்கு மகனுக்கும் திருமணம் செய்து பார்க்கவேண்டும் என்ற தீராத ஆசையில் தினமும் மகனை நச்சரிக்கத் தொடங்கினாள் சாரதா.

எங்கேயாவது அழகான பெண்களைக் கண்டால் மனம் மாறியாவது சம்மதம் சொல்லுவானோ என்ற அற்ப ஆசை அவளுக்கு. அதனாலே எங்கேயாவது ஷாப்பிங் போனால், கோயிலுக்குப் போனால் 'அந்தப் பெண்ணைப் பாரேண்டா தேவதை மாதிரி என்ன அழகு, இந்தப் பெண்ணைப் பாரேண்டா என்ன மாதிரி லட்சுமி கடாட்சமாய் இருக்கிறா" என்று தினமும் இதே தொல்லையாய்ப் போய்விட்டது.

அதனாலே தான் தாயார் பின்னாலே இருந்து காதுக்குள் கிசுகிசுத்தபோது திரும்பிப் பார்க்காமல் அலட்சியம் செய்தான்.

'ஏன்டா, யார் யாருடைய பிரச்சனையை எல்லாம் வலியப்போய் உன்னுடைய தலையிலே போட்டுக் கொண்டு செய்வியே, இதை மட்டும் ஏன் கண்டு கொள்ள மாட்டேனெங்குறாய்? பாவமடா அந்தப் பெண்ணு, ஏதோ ஆபத்திலே மாட்டியிருக்கிறா போலத் தெரியுது! கொஞ்சம் உதவி பண்ணேண்டா?'

'யாரை அம்மா சொல்லுறாய்?" பச்சை விளக்கு எப்போ எரியும், அங்கிருந்து கிளம்பலாம் என்ற அவசரத்தில் அவனிருந்தான்.

'இந்தப் பக்கம் கொஞ்சம் திரும்பிப் பாரேன்"

வேண்டா வெறுப்பாய்த் திரும்பிப் பார்த்தவன் ஆச்சரியப்பட்டான்.

யார் அந்த தேவதை?

ஒருகணம் அவளை உற்றுப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

இவளா?

ரம்யா! அந்த ஊரிலே உள்ள செல்வந்தர் ஒருவரின் மகள். இவளது அண்ணன் ரமேஷ் இவனோடு சட்டக் கல்லுரியில் ஒன்றாகப் படித்த நண்பன்.

பழகுவதற்கு இனியவன். ஆனால் இவளோ பணத்திமிர் பிடித்தவள். அதைவிட தான் பெரிய உலகஅழகி என்ற எண்ணம் வேறு. நண்பனைத்தேடி அவர்கள் வீட்டிற்குப் போனபோதெல்லாம் இவனை அவள் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்தது இவன் மனதில் அந்த நாட்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

வெறித்த பார்வையோடு சாரதியின் ஆசனத்தில் ஆடாமல் அசையாமல் அவள் உட்கார்ந்திருந்தாள்.

யாரோ பின்னால் இருந்து துப்பாக்கி முனையில் அவளைக் கடத்திக் கொண்டு போவது போல மிரண்டுபோய் இருந்தாள். அவளது முகத்தில் பயக்களை அப்படியே தெரிந்தது.

நிலமையின் பயங்கரத்தை சூரியா உடனே கிரகித்துக் கொண்டான். 'இவளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்' என்று அவனது பழிவாங்கும் மனசு ஒருகணம் நினைத்தது.

ஆனால் அவன் படித்த சட்ட அறிவு அவனைச் சிந்திக்க வைத்தது. அவள் மீது அவனுக்கு தனிப்பட்ட வெறுப்பு இருந்தாலும் ஆபத்திற்கு உதவவேண்டும் என்ற நல்லமனம் அவனை விரைவாகச் செயற்பட வைத்தது.

சட்டென்று தனது ஸ்கூட்டரை அவளது காருக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்திவிட்டு இறங்கி காரைச் சுற்றி வந்து நோட்டம் விட்டான்.

வேறு யாராவது துப்பாக்கியோடு இருக்கைக்குப் பின்னால் மறைந்து இருக்கிறார்களோ என்று கண்ணாடிக் குள்ளால் பார்வையைச் செலுத்தினான். அன்னியர் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவளுக்கு என்ன நடந்திருக்கும்?

அதைப்பற்றி சிந்திக்க இப்போது நேரமில்லை! அவள் ஆடாமல் அசையாமல் பயத்தோடு சீட்டில் உட்கார்ந்திருப்பதில் இருந்து அவளுக்கு ஏதோ ஆபத்துக் காத்திருப்பது தெரிந்தது. அருகே சென்று பார்த்தபோது அவள் முகத்தில் பொட்டுப் பொட்டாய் வியர்வை துளிர்த்திருந்தது.

இதயம் வேகமாகத் துடிக்க அவளது சின்னமார்பு மேலும் கீழும் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. குனிந்து உள்ளே பார்வையைச் செலுத்தியவன் மீண்டும் அதிர்ந்தான்.

இடுப்பிலே அது என்ன கறுப்பாக ஒரு பட்டி..?

அவளது இடுப்பிலே இருக்கையோடு சேர்ந்தபடி பெல்ட் ஒன்று கட்டப்பட்டிருந்தது. அவளது இதயத் துடிப்பையும் மிஞ்சி டிக், டிக் சத்தம் இவன் காதில் விழுந்தது. ஒவ்வொரு டிக், டிக் சத்தமும் மரணதேவனிடம் அவளை இழுத்துக் செல்வது இவனுக்குப் புரிந்தது.

குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டு, அதாவது டைம் பாம்!

இது யாரோ விஷமிகளோ, தேசவிரோதிகளோ செய்த வேலையாய் இருகக்கலாம். இன்னும் சொற்ப நேரத்தில் அவன் கண்முன்னாலேயே இந்த அழகிய மலர் இதழ் இதழாய்ச் சிதறுண்டுபோமோ?

நினைக்கவே அவனது உடம்பு நடுங்கியது.

அவள் மட்டுமா பாதிக்கப்படுவாள், இங்கே அக்கம் பக்கம் எல்லாமே பாதிக்கப்படுமே? அப்பாவி மக்களின் உயிர் உடமை எல்லாமே சட்டென்று அவன் கவனத்தில் வந்தன. ஏதாவது செய்து இந்த அழிவைத் தடுத்தேயாகவேண்டும்.

'நோ!' என்று வாய்விட்டுக் கத்தியவன், அவசரமாகச் செயற்பட்டான்.
தனது செல்லிடபேசியில் குண்டு அகற்றும் அவசரபிரிவிற்கு விபரத்தை தெரிவித்தான்.

தனது ஸ்கூட்டரின் அவசர விளக்கைப் போட்டு ஏனைய பயணிகளை அந்தக் காருக்கு அருகே வராமல் எச்சரிக்கை செய்துவிட்டு தாயாரிடம் விரைந்து வந்தான்.

'அம்மா, ஒரு ஆட்டோ எடுத்துக் கொண்டு நீங்க வீட்டிற்குப் போங்க, இந்தாங்க பணம், நான் அப்புறம் வர்றேன்."

தாயாரின் கைகளில் பணத்தைத் திணித்துவிட்டு பதிலுக்குக் கூடக் காத்திராமல் ரம்யாவிற்கு அருகே சென்று சாரதிபக்கக் கதவில் ஏதாவது வயர் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை அவதானித்தான்.

இல்லை என்று தெரிந்ததும் கதவின் கைப்பிடியில் கையை வைத்து மெதுவாக இழுத்தான். கதவு மெல்லத் திறந்து கொண்டது.

பக்கவாட்டில் அவளை இப்போ முழுமையாக அவனால் பார்க்க முடிந்தது.
"பயப்படாதே!" என்று மெதுவாக குனிந்து அவள் காதுக்குள் ஆறுதல் வார்த்தைகள் சொன்னான்.

மெல்லத் தலைசாய்த்து அவளது முழங்காலுக்கருகே உடம்பை வளைத்து அவளது இடுப்புப் பட்டியை ஆராய்ந்தபோது அவளது சூடானமூச்சுக் காற்று இவனது கன்னத்தில் பட்டுத் தெறித்தது.

அலங்கோலமாய் மேலே ஏறியிருந்த அவளது ஸ்கேட்டை இழுத்து அவளது பளிங்கு போன்ற தொடைகளை மற்றவர்களின் பார்வையில் இருந்து மறைத்து விட்டபோது அவளின் உடம்பு சிலிர்ததை இவனால் உணரமுடிந்தது.

'டிக்.. டிக்.. டிக்..!"

நேரம் வேகமாய் ஓடிக்கொண்டிருந்தது. அந்த மணிக்கூட்டில் நேரத்தைப் பார்த்தான்.

மூன்றே மூன்று நிமிடங்கள் தான் மிஞ்சியிருந்தன. வாழ்வா, அல்லது சாவா?
மூன்று நிமிடங்கள் தான் பாக்கி என்று தெரிந்ததும் அவளது உடம்பு மெல்ல மெல்ல உதறலெடுத்தது. காலமெல்லாம் உன்காலடியில் கிடப்பேன்,

எப்படியாவது என்னைக் காப்பாற்றிவிடு, பிளீஸ் பிளீஸ்..! என்பது போல அவளது விழிகள் அவனிடம் கெஞ்சி மன்றாடின. உயிர்ப் பிச்சை கேட்பது போல அவளது மெல்லிய உதடுகள் வார்த்தைகள் வராமல் துடிப்பதை இவன் அவதானித்தான். அவளது கண்கள் மரணபயம் என்றால் என்னவென்று அப்படியே காட்டிக் கொடுத்தன.

இப்போ அவள் இருக்கும் அந்த நிலையைப் பார்த்தபோது அன்று அவனை அலட்சியம் செய்த பெண் இவள்தானா என்பதை அவனால் நம்பமுடியாதிருந்தது. பெண் என்றால் பேயே இரங்கும் போது இவன் மட்டும் எம்மாத்திரம்?

வீணாக்கும் ஒவ்வொரு மணித்துளியும் முக்கியமானது! அதன் பெறுமதி அளவிடமுடியாதது!

எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து அவளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று உடம்பெல்லாம் துருதுருத்தது. குண்டைச் செயலிழக்க வைக்கும் பிரிவினருக்காக இனியும் காத்திருக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவன்,  விரைவாகக் காரியத்தில் இறங்கினான்.

எந்த வயரின் தொடர்பைத் துண்டிப்பது? கறுப்பா, சிவப்பா?

எப்போதோ ஒரு ஆங்கிலப் படத்தில் இப்படியான குண்டைச் செயலிழக்க வைப்பது எப்படி என்பதைப் பார்த்த ஞாபகம் திடீரென வந்தது. ஆனால் எந்தநிற வயரைத் துண்டித்தான் என்பது சட்டென்று ஞாபக்திற்கு வர மறுத்தது.

கறுப்பா? சிவப்பா? மூளைக்கு வேலை கொடுத்துப் பார்த்தான்.

பதட்டத்தில் 'ஏதோ ஒன்று!' என்ற பதில் தான் வந்தது.

நிறத்தைச் சொல்லத் தயங்கியது.

இனியும் காத்திருப்பதில் அர்த்தமில்லை. வருவது வரட்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு கடவுளைப் பிரார்த்தித்தபடி கையில் அகப்பட்ட ஒரு வயரைப் பிடித்தான். என்ன நிறம் என்று கூடப் பார்க்கவில்லை.
துண்டிக்கலாமா? ஒரு கணம் தயங்கினான்.

'டிக்.. டிக்.. டிக்..!"

இன்னும் பத்து வினாடிகள்! இனியும் தாமதிக்க முடியாத நிலைமை. எப்படியோ வெடித்துச் சிதறப்போகிறது.

அதற்கிடையில் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்!
'தொலைந்துபோ!"' என்று ஆவேசமாகக் கத்தியபடி அந்த வயரைப் பிடித்து இழுத்தான்.

ஒரு வினாடி எல்லா இயக்கமும் நின்றுபோக, மறுகணம் 'படீர்' என்ற சத்தம் கேட்டது, அவன் சுதாரிக்குமுன் அவன் மார்பில் அவள் பொத்தென்று விழுந்தாள். நினைவிழந்த அவளை மெதுவாகத் தாங்கி அணைத்து, பட்டியை அகற்றி அங்கே தயாராக வந்து நின்ற ஆம்புலன்ஸில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றான் சூரியா.

நினைவு தெளிந்து அவள் படுக்கையில் கண்விழித்துப் பார்த்தபோது, மங்கிய வெளிச்சத்தில் சூரியாவின் முகம்தான் முதலில் தெரிந்தது.

தனக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் மிரள மிரளப் பார்த்தாள். அருகே உட்கார்ந்து இருந்த சூரியாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, குண்டு வெடித்ததா இல்லையா என்ற சந்தேகத்தோடு,

'நாங்க எங்கே இருக்கிறோம்" என்றாள்.

அவளது அந்த ஸ்பரிசத்தில் உடம்பெல்லாம் கிளுகிளுப்பில் சிலிர்க்க தன்னை மறந்த சூரியா, அவளது கேள்வியின் அர்த்தம் புரியாமல் மெல்லிய புன்னகையோடு,

'சொர்க்கத்தில்!" என்றான்.

*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)


*************************************************************

குரு அரவிந்தன் - வாழிய வாழியவே

தமிழ்மொழி யொளிரத் தம்மினம் போற்ற
இமிழ்மழை தரும்சுக இன்னுணர் வெழுத்தால்
யாக்கும் இவர்கதை ஞான்றும் புகழை
ஆக்கி ஊக்குதே! ஆர்வம் பெருகுதே!

-பண்டிதர்.மா.சே.அலக்ஸாந்தர்.

காதலுக்கு இந்தநாள்! - Valentine StoryLOVE STORY:  kuruaravinthan@hotmail.com


காதலுக்கு இந்தநாள்!     
      

காதலுக்கு இந்தநாள்!    - Valentine Story
குரு அரவிந்தன்

       
மாலை நேரத்து சப்வேயின் பரபரப்பில் மூழ்கிப் போகாமல் அவன் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றான். ஆண்கள் பெண்கள் எல்லோரும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

அனேகமானவர்களின் முகங்களில் புன்னகை தவழ்ந்தது. அவர்களின் கைகளில் இன்று வேலன்டைன்ஸ்டே என்பதைச் சொல்லாமல் சொல்லும் வண்ணமலர்கள் சிரித்தன. ஏதோ ஒரு எதிர்பார்ப்போடு யாரையோ தேடி அவர்கள் அவசரமாகச் செல்வது தெரிந்தது.

குறித்த நேரத்திற்கு அவள் கட்டாயம் வருவாள் என்பதால் அவன் பார்வை நீண்டு விரிந்தது.

அவசர அவசரமாக அவள் நடந்து வருவது தூரத்தில் தெரிந்தது. டெனிம் பான்ஸ், நீலநிற ஸ்போட்ரீசார்ட்,  நைக்கி பாதவணியும் போட்டிருந்தாள்.  அவனுக்கு அவளின் அந்த நடை பிடித்தது. இந்த உடை பிடித்தது.

அவன் கண்ணுக்கு அவள்  ஒரு அதிசயம்.

மறைவாக நின்று கொண்டு அவளது நடையைப் பார்த்து ரசிக்க வேண்டும் போலவும் அவனது மனம் விரும்பியது.

வியர்க்க விறுவிறுக்க அவள் அந்தக் கூட்டத்திற்குள் அவனைத் தேடினாள். தூரத்திலேயே அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது. சட்டென்று அவள் நடையிலே ஒரு மாற்றம் தெரிந்தது.

இதுவரை அவசரமாய் வேகமாய் நடந்தவள் அவனைக் கண்டதும் மெல்ல அன்னநடை நடந்தாள்.

அவளது செய்கையைப் பார்க்க அவனுக்குச் சிரிப்பு வந்தது. அவள் அவனருகே வந்து "ஹாய்" என்று புன்னகை பூத்தாள்.

'ரொம்ப நேரம் காத்திருக்க வைத்து விட்டேனா?' அவளது கேள்வியில் 'மன்னித்துவிடு' என்று சொல்வது போல் இருந்தது.

"இல்லை"என்று அனிச்சையாய் தலையசைத்தான்.

'அவசரம், கட்டாயம் சந்திக்க வேண்டும்' என்று டெலிபோனில் அவள் கேட்டுக் கொண்ட படியால் தான் அவன் இங்கே வந்து அவளுக்காகக் காத்தி ருந்தான்.

டெலிபோனில் முழு விபரத்தையும் சொல்ல விரும்பாதது ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. சிறிது காலமாகத் தான் அவனுக்கு அவளைத் தெரியும். அதுகூட ஒரு நாள் அவள் கையில் பாரத்தோடு இருக்க இட மில்லாமல் நின்றபோது அவன் எழுந்து அவள் இருப்பதற்கு இடம் கொடுத்தான். அவள் அதற்கு நன்றி சொன்னாள்.

அவனது அந்தச் செய்கை அவள் மனதில் அவனைப் பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கியது. அப்புறம் அவ்வப்போது எங்கேயாவது சந்திக்கும் போது இருவரும் பேசிக் கொள்வதுண்டு.

 ஆரோக்கியமான நல்ல விடயங்களை விவாதிப்பதில் அவர்கள் மனம் நிறைந்து போவதுண்டு. ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாய் இருப்பதில் எவ்வித தவறுமில்லை என்பதில் இருவருக்கும் உடன்பாடு இருந்தது.

சமீபத்தில் தான் அவனது டெலிபோன் நம்பரை அவளுக்குக் கொடுத்திருந்தான். என்றைக்குமே அவள் அவனை டெலிபோனில் அழைத்ததில்லை! இன்று காலையில் அவளது குரலைக் கேட்டதும் அவன் அசந்து போனான்.

 அப்படி என்ன அவசரம்?

அவளாகவே சொல்லட்டும் என்று எண்ணியபடி அவன் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தான். அவளுக்கு என்னவோ போல இருந்தது.

"என்னவாம்?" வெட்கப் பட்டுக் கேட்டாள்.

"ஒன்றுமில்லை" என்று தலையாட்டினான்.

"ஒன்றுமில்லை என்றால் ஏன் என்னை அப்படிப் பார்க்கிறீங்க?"

"ஏன் பார்க்கக் கூடாதா?"

"ம்...பார்க்கலாம்,  ஆனால் ஏன் என்று சொல்லலாம் தானே?"

அவனது பார்வை இன்று வித்தியாசமாய் இருப்பது போல அவளுக்கு தெரிந்தது.

"என்னமோ பேசணும் என்று சொல்லிவிட்டு மௌனமாய் நின்றால் என்ன அர்த்தம்?"

"நிறையப் பேசணும் ஆனால் நீங்க பேச விட்டால் தானே!"

"நானா?.... அம்மாடி நான் ஒன்றும் செய்யலையே! இங்கே ரொம்பக் கூட்டமாய் இருக்கு வாங்க வெளியே போய்ப் பேசுவோம்."

இருவரும் கூட்டத்தோடு கூட்டமாய் வெளியே வந்தார்கள்.

இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல ஏனோ அவளின் முகத்தில் ஒருவித உற்சாகம் தெரிந்தது. நீண்ட மௌனத்தை அவன் தான் முதலில் கலைத்தான்.

"சரி என்ன விஷயம் என்று இப்பவாவது சொல்லுங்களேன்!"

"நீங்க சொல்லுங்க"

"நான் என்ன சொல்ல....நீங்க தானே ஏதோ பேசணும் வந்து சந்திப்பிங்களான்னு கேட்டீங்க"

அவள் ஒரு கணம் தயங்கினாள்.பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய்த் தலைகுனிந்தவள்,

"அப்பா ஊரிலே இருந்து கடிதம் போட்டிருக்கிறார்" என்றாள்.

"அதற்கென்ன சந்தோஷம் தானே"

"எனக்கா?..... இல்லை!"

"ஏன்?" கேள்விக் குறியாய்ப் பார்த்தான்.

"எனக்கு வரன் பார்க்கிறாங்களாம்"

அவனுக்கு அவளது பதில் எதிர்பாராத அதிர்ச்சியாய் இருந்தது. வாய்க்குள் வார்த்தை வராமல் திணறினான்.

"நான் என்ன சொல்லட்டும்" அவள் தலை குனிந்து நைக்கியால் கோலம் போட்டாள்.

பெண்கள் தலை குனிந்து வலதுகாலால் கோலம் போட்டால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஏதோ சினிமாவில் பார்த்த ஞாபகம் அவனுக்கு வந்தது.

"நீங்க என்ன சொல்லப் போறீங்க...?"

"தெரியாது......நீங்க தான் சொல்லணும்" அவள் மெல்ல நிமிர்ந்து ஏக்கத்தோடு அவனைப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் கெஞ்சல் தெரிந்தது. அது அவன் மனதைத் தொட்டது.

இவ்வளவு விரைவில் இப்படி ஒரு கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டி வரும் என்று அவன் எதிர் பார்த்திருக்கவில்லை.

அவளைப் பார்க்கும் போதும் சரி அவளோடு பழகும் போதும் சரி அவனது மனத்தில் இனம் புரியாத ஒரு வித இன்ப அலை மோதுவதை அவன் உணர்ந்து தான் இருந்தான். அவளிடம் அவனுக்குப் பிடித்தமான பல வி~யங்கள் இருந்தன.

குறிப்பாக அவளது தெளிவான கள்ளத்தனம் இல்லாத கபடமற்ற பார்வை அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். யாருடைய மனதையும் நோகடிக்காமல் பல சந்தர்ப்பங்களில் அவள் புத்திசாலித்தனமாய்ப் பதிலளிப்பதை அவன் தனக்குள் மெச்சியிருக்கின்றான். சில நேரங்களில் அவளைப் பார்க்கும்   போது "ஐ லவ்யூ.....லவ்யூ" ன்னு தொண்டை கிழியச் சத்தம் போட்டுக் கத்த வேண்டும் என்று அவன் நினைப்பதுண்டு.

அப்போதெல்லாம் நட்பு  என்கிற   அந்தக் கோடு அவனைத் தடுத்து விடுவதுண்டு. அவள் கேட்காவிட்டால் என்றாவது ஒரு நாள் இதே கேள்வியை அவன் அவளிடம் கேட்கத்தான் நினைத்திருந்தான். அதற்கு நல்ல தொரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்று தான் இதுவரை அவன் காத்திருந்தான்.

"நீங்க ஒருவரை விரும்புவதாக அப்பாவிடம் சொல்லுங்களேன்"

"சொல்லலாம்..... ஆனால்...?"

"ஆனால் என்ன?"

"அவருக்கும் என்னைப் புடிச்சிருக்கான்னு அப்பா கேட்டா நான் என்ன பதில் சொல்ல?" ஆவலோடு விழிகளை உயர்த்தி அவனின்  பதிலுக்காகக் காத்திருந்தாள்.

இப்போ அவன் துணுக்குற்றான்.

"அவருக்கென்றால்?" இவள் என்ன சொல்ல வருகிறாள்? இவள் மனதை யாரோ ஒருவனிடம் பறிகொடுத்திருப்பாளோ? அது தான் நண்பன் என்ற முறையில் என்னிடம் ஆலோசனை கேட்கின்றாளோ?"

நட்பு என்கிற இந்தப் பந்தத்தை நான் அசிங்கப் படுத்தக் கூடாது. என்னுடைய தவறான முடிவால் அவளது மனம் என்றுமே நோகக் கூடாது. எதற்கும் வார்த்தையை அளந்து நிதானமாக அவளோடு பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

"அந்தப் பையனைக் கேட்டுப்பாருங்க, அவனுக்கும் உங்களைப்  பிடித்திருந்தால் சம்மதம் என்று சொல்லி விடுங்களேன்".

அவள் அடிபட்ட மான் போலச் சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள்.

இவன் என்ன சொல்கிறான்? உண்மையாகவே ஒன்றும் தெரியாதவன் போல நடிக்கிறானா, இல்லை என்னைச் சீண்டி வேடிக்கை பார்க்கிறானா?

"அந்தப் பையனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவன் நல்லவனா, இல்லையா? உங்க வீட்டிலே எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவனை ஏற்றுக் கொள்வாங்களா? இதை எல்லாம் நன்றாக யோசித்துப் பார்த்தீங்களா? சொல்லுங்க".

அவள் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அவனைப் பார்த்து விழித்தாள். இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லலாம்? மனதில் இருப்பதை எப்படியாவது சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள்.
'தெரியாது......! ஆனால் என்னோட மனசிலே அவர்,.....அவர் மட்டும் தான் எனக்குள்ளே இருக்கிறார் என்பது எனக்கு நல்லாய்த் தெரியும்".

"அப்புறம் ஏன் யோசிக்கிறீங்க, நீங்க தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவனை நீங்க இழக்க வேண்டி வரலாம். பயப்படாமல் அவன் கிட்ட போய்ப் பட்டென்று "ஐ லவ்யூ" சொல்லிடுங்க, ஏனென்றால் 'நெகிலெட்டட் ஒப்பர்சூனிட்டி நெவ ரிட்டேன்', அதாவது தவறவிட்ட சந்தர்ப்பங்கள் என்றுமே திரும்பக் கிடைப்பதில்லை! புரியுதா? '

"சொன்னால் அவர் புரிஞ்சுக்குவாரா?" என்றாள் முகம் சிவக்க.

"நிச்சயமாய்.....உங்களைப் போல ஒரு அழகான, ஸ்மார்ட்டான பெண் அவனிடம் போய் "ஐ லவ்யூன்னு" சொல்லும் போது, அதைக் கூட அவனால் புரிஞ்சு கொள்ள முடியாவிட்டால் அவன் ஒரு மாங்காய் மடையனாகத் தான் இருக்க முடியும். சொல்ல நினைத்ததைச் சொல்ல முடியாமல் வாய்  மூடி மௌனமாய் இருந்ததால் அழிந்து போன ஆயிரமாயிரம் காதற் கதைகளில் உங்கள் கதையும் ஒன்றாகிப் போய்விடலாம். நீங்கள் தவற விட்ட இந்தச் சந்தர்பத்திற்காக காலமெல்லாம் மனசுக்குள் வெந்து கண்ணீர் வடிக்க வேண்டியும் வரலாம்."

அவன் உணர்ச்சி வசப்பட்டு கைகளை விரித்து அவளுக்கு விளக்கம் சொல்ல, அவள்  வாய்விட்டுப் பலமாகச் சிரித்தாள்.

அவனுக்கு என்னவோ போல இருந்தது. சட்டென்று நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான்.

"ஏன்.....உங்கள் அவரைப் பற்றி நான் ஏதாவது தப்பாய்ச் சொல்லி விட்டேனா?"

"ஆமா" என்று விழியசைத்தவள் சட்டென்று கேட்டாள்,

"ஒரு பெண் தன்னை விரும்புகின்றாள் என்பதைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத ஆண்களும் இருக்கிறார்களா?"

"இருக்கலாம்..... ஏதோ ஒரு காரணத்திற்காகத் தன்னை வெளிக்காட்டாமல் இருக்கலாம். அவள் தன்னைத்தான் விரும்புகின்றாள் என்று தெரிந்த பின்பும் மௌனமாய் இருந்தால் அவன் முட்டாளாய்தான் இருக்கணும்".

"அப்போ.......நீங்க முட்டாளா?"

"இல்லையே" என்று தலையசைத்தான் அவசரமாய்.

"ஐ லவ்யூன்னு ஒரு பெண் சொன்னா, அதை நீங்க புரிஞ்சுக்குவீங்களா?" என்றாள்.

"நானா?" வார்த்தை வராமல் அவன் தடுமாறினான்.

இவள் என்ன சொல்லப் போகிறாள்?

இதயமே நின்று விடாதே! இவள் கொடுக்கப் போகும் அதிரடியை உன்னால் தாங்கிக் கொள்ள முடியுமா?

அவள் அருகே வந்து அவனது காதுக்குள்,

"ஐ லவ்யூ" என்றாள் சன்னமான குரலில்.

அவன் காதுக்குள் அந்த வார்த்தைகள்  தேனாய்ப் பாய்தது.

ஒரு கணம் அவனது இதயம் துடிக்க மறந்தது.

இந்த நிலா உனக்காகத்தான் என்று அவனது உள்ளம் கவர்ந்தவள் முதன் முதலாகக் கொடுத்த அங்கீகாரத்தில்  என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தவன், ஒரு விதமாகத் தன்னைச் சமாளித்துக் கொண்டு,

"மீ......ரூ" என்றான்.

எதிர்பாராத இன்ப அதிர்ச்சியில் வார்த்தைகள் வாய்க்குள் தடுமாறின.

"உண்மையாகவா?" அவளை அறியாமலே அவள், அவன் எதிரே மிக அருகே நெருக்கமாய் வந்து தோள்களைப் பிடித்து உலுக்கினாள்.

"இன்னுமொரு தடவை சொல்லுங்க!"

"ஐ லவ்யூ ரூ" என்றான்

அவளது அழகான மெல்லிய பூப்போன்ற சிவந்த கைகளின் தொடுகையில் அவன் மீண்டும் மெல்ல உறைந்து போனான்.

இதமான தென்றல் அவர்களை மெல்லத் தழுவி "காதலுக்கு இந்த நாள்" என்று காதுக்குள் ஏதோ ரகசியம் சொன்னது!

*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)

**********************************************************

குரு அரவிந்தன் வாழி! வாழி!

இவன் ஆக்கம் சிறுசுக்கும் பழசுக்கும்
அஞ்சறைப் பெட்டகம்
ஆக மொத்தத்தில் குரு அரவிந்தன்
இலக்கியப் பழங்கள் தரும் ஒரு
பெரும் விருட்சம்!  இலக்கிய விருட்சம்!

-தம்பையா ஸ்ரீபதி-


தங்கையின் அழகிய சினேகிதி - Valentine Story
LOVE STORY:  kuruaravinthan@hotmail.com

தங்கையின் அழகிய சினேகிதி


தங்கையின் அழகிய சினேகிதி - Valentine Story

குரு அரவிந்தன்


அவன் உள்ளே வரும்போது அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.

தங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது  கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.

அவளைப் பார்த்த உடனேயே அவன் மனத்தில் என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான். எத்தனையோ இளம் பெண்களைப் பார்த்திருக்கிறான், பழகியிருக்கிறான் ஆனால் சட்டென்று இப்படி ஒரு உணர்வு அவனுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

அவளைப் பார்த்ததும், இரசாயண மாற்றங்கள் சட்டென்று உடம்பில் ஏற்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான்.

எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலவும், அவளோடு ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்பது போன்றதுமான அந்த உணர்வு அவனுக்குள் அலை மோதிக் கொண்டிருந்தது.

அறைக்குள் சென்று, அறைக்குள் இருந்தபடியே அவளைப் பார்க்கக் கூடியதாக  அறைக்கதவை கொஞ்சமாகத் திறந்து வைத்தான். அவள் இவன் பக்கம் திரும்மபிய போதெல்லாம் இங்கிருந்தே அவளது முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தான்.

‘இவளா..?’ தங்கையை அழைத்து வரப் பாடசாலைக்குச் சென்றபோதெல்லாம் இவளையும் பாடசாலைச் சீருடையில் இரண்டோ மூன்று தடவைகள் தங்கையோடு கண்டிருக்கிறான்.

அப்பொழுதெல்லாம் எந்தவிதமான இரசாயன மாற்றத்தையும் அவள் இவனுக்குள் ஏற்படுத்தியதில்லை. ஆனால் அப்போது இல்லாத அழகு இப்போது அவள் முகத்தில் அப்பிக்கிடந்தது.

அந்த அழகா, அல்லது அவள் நேர்த்தியாக அணிந்திருந்த அந்த உடையா, அல்லது இடையிடையே  வெட்கப்பட்டுச் சிரிக்கும் அந்தச் சிரிப்பா, அல்லது வயதுக் கோளாறா அவனைக் கவர்ந்து இழுத்திருக்கிறது என்பது அவனுக்குப் புரியவில்லை.

ஆனால் என்னவென்று சொல்லமுடியாத ஏதோ ஒன்று அவளிடம் இருந்து இவனைக் கவர்கிறது என்பது மட்டும் அவன் படும் அவஸ்தையில் இருந்து அவனால் புரிந்து கொள்ளமுடிந்தது.

‘ஹாய்!’ என்று சொல்லித் தன்னைத்தானே அறிமுகப்படுத்தி, ஏதாவது அவளிடம் பேசலாமா என்று நினைத்தான். அப்படிப் பேசுவதற்கு ஏதாவது நல்ல ஒரு விடயம் கிடைத்தால் நன்றாயிருக்கும் அப்போது தான் ஆரம்பமே நல்லாயிருக்கும்.

‘சுகமாய் இருக்கிறீங்களா?’ என்று கேட்கலாம் அல்லது ‘தங்கையோடு படிக்கிறீங்களா?’ என்று பேச்சைத்தெடங்கலாம்.

‘தமிழில் பேசினால் தன்னைப் பற்றி மட்டமாய் நினைப்பாளோ? ஆங்கிலச் சொற்களை இடையிடையே புகுத்திப் பேசினால் கொஞ்சம் மதிப்பாய் நாகரிகமாக இருக்குமோ?

எது எப்படி யானாலும் அவளோடு இன்று பேசவேண்டும். இல்லாவிட்டால் எப்பவுமே சந்தர்ப்பம் கிடைக்கப் போவதில்லை! இவை எல்லாவற்றுக்கும் முன்னால் எதையாவது ஆரம்பிப்பதற்கு தங்கையின் ஒத்துழைப்பு வேண்டுமே!

ஹோலுக்குள் வந்து ஃப்ரிட்ஜ்சைத் திறந்தான்.

ஏதாவது யூஸ் இருந்தால் எடுத்துக் குடிப்பது போல பாவனை செய்ய நினைத்தான். அவளது பார்வையில் படும்படியாக இருந்த ஃப்ரிட்ஜ்சைத் திறக்கும் போது ஏற்படும் சத்தத்தில் அவள் கவனம் தன் மீது திரும்பலாம் என எதிர்பார்த்தான்.

இதே சாட்டாக வைத்து ‘ஏதாவது சாப்பிடுறீங்களா?’ என்று யதார்த்தமாயக் கேட்கலாம்.

திரும்பித் தற்செயலாகப் பார்ப்பது போல அவளைப் பார்த்தான்.

தங்கை கொடுத்திருக்க வேண்டும், அவளோ ஏற்கனவே கையில் யூஸ் வைத்திருந்தாள்.

முதல் முயற்சியே தோல்வியோ?

தங்கைமேல் இனம்புரியாத வெறுப்பு வந்தது. நாகரிகம் தெரியாதவள். வீட்டிற்கு வந்த சினேகிதியை அவனுக்கு அறிமுகப் படுத்தியிருக்கலாம்.

அட்லீஸ்ட் ‘இவன் தான் என்னோட அண்ணா’ என்றாவது சொல்லியிருக்கலாம்.

அவள் சொல்லமாட்டாள். அவனுக்குத் தெரியும்!

சொல்லக்கூடிய மாதிரி அவனும் அவளோடு பழகவில்லை. அம்மா அடிக்கடி சொல்வது போல அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவு பூனையும் எலியும் போல!

அப்படி இல்லை என்று அறிமுகப் படுத்தினாலும், வழமைபோல முகத்திலே அறைந்தது போல ஏதாவது சொல்லி விடுவேனோ என்ற பயத்தில் அவள் முன்எச்சரிக்கையோடு சினேகிதியின் அறிமுகத்தைத் தவிர்த்திருக்கலாம்.

அல்லது சினேகிதிக்கு முன்னால் ஏதாவது சொல்லப்போய், அவனிடம் தேவையில்லாமல் ஏன் அவமானப்படுவான் என்று அவள் தவிர்க்க நினைத்திருக்கலாம்.

அவனது நெஞ்சு வேகமாக அடித்துக் கொள்வது அவனுக்குப் புரிந்தது.

சாப்பாட்றறையில் அம்மா உணவு பரிமாற, அவர்கள் இருவரும் வேடிக்கையாய்க் கலகலவென்று சிரித்துக் கொண்டு சாப்பிடுவது தெரிந்தது.

என்னையும் அழைத்திருந்தால் எவ்வளவு கலகலப்பாக இருந்திருக்கும்.

இப்போ என்ன செய்யலாம்?

கண்ணாடிக்கு முன்னால் நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டான். முகம் வியர்த்துக் கறுத்திருந்தது. முன்பக்க முடிகலைந்திருந்தது. விரல் நுழைத்து தலைவாரி, வியர்த்த  முகத்திற்கு லேசாகப் பவுடர் தவிக்கொண்டான்.

வாசலில் யாரோ அவனது பெயரைச் சொல்லி அழைப்பது போல இருந்தது.

‘சீ’ என்று அலுத்துக் கொண்டான். சிவபூசையில் கரடிபோல இந்த நேரத்தில் யாராய் இருக்கும்? அவர்களைக் கடந்து வாசலுக்கு வந்தான்.

அவனது கூட்டாளிகள். அவர்களோடு கிரிகெட் விளையாட வருவதாகச் சொன்னது ஞாபகம்வந்தது. அவர்களோடு போகாமல் இருக்க ஏதோ காரணம் சொல்லித் தப்பிக் கொள்ளவேண்டும். அவன் சொன்ன காரணம் அவர்களுக்குச் சிரிப்பைத் தந்தது. ஆனாலும் "'சீக்கிரம் வந்துவிடு"' என்று சொல்லிவிட்டுப் போனார்கள்.

உள்ளே வரும்போது அவள் தன்னைக் கவனிப்பாள் எனநினைத்தபோது, ஒரு கிரிகட் விளையாட்டு வீரனைப்போல நடந்து காட்ட முற்பட்டாலும், அவனை அறியாமலே நடை தளர்ந்து கால்கள் பின்னிக்கொள்வதை உணர்ந்தான்.

நண்பர்கள் அவனது பெயரைச் சொல்லி அழைத்ததுகூட அவளுக்குக் கேட்டிருக்கலாம். மனதுக்குள் அவனது பெயரைச் சொல்லி, இணைத்துப் பார்த்திருப்பாளோ?

இப்போது அவள் சாப்பிட்டு முடித்து விட்டு ஹாலில் தங்கையுடன் உட்கார்ந்து ஃபமிலிஆல்பம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவனது தங்கை ஆல்பத்தில் உள்ள ஒரு படத்தைச் சுட்டிக்காட்டி ஏதோ சொல்ல அவள் வாய்விடடுப் பலமாகச் சிரித்துவிட்டு, சட்டென நிமிர்ந்து அவனையே பார்ப்பது போல இவனுக்குள் ஒருபிரேமை தெரிந்தது.

என்னவாய் இருக்கும? ஆல்பத்தில் உள்ள குழந்தைப் பருவத்தில் டயப்பரோடு நிற்கும் அவனது படத்தைத் தங்கை காட்டியிருப்பாளோ? அதைப் பார்த்துத்தான் அவள் சிரித்திருப்பாளோ?

அந்தப் படத்தை முதல் வேலையாக ஆல்பத்தில் இருந்து எடுத்து விடவேண்டும் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் தனது அறைக்குள் நுழைந்தான்.

கண்ணாடிக்கு முன்நின்று தன்னை அழகுபார்த்தான். இப்படியாக அவஸ்தைப்படும் போதெல்லாம் கண்ணாடிதான் அவனுக்குத் துணைபோகிறது. சட்டையை மாற்றி நல்லதாய்ப் போட்டால் கொஞ்சம் கவர்ச்சியாய் இருக்கும் என்ற நினைத்தான்.

ஆனால் இந்தத் திடீர் மாற்றத்தை வீட்டிலே கவனிக்கலாம் என்பதால் அதை மாற்றாமலே விட்டுவிட்டான்.

இவன் சொல்ல நினைத்தது, செய்ய நினைத்தது எதுவுமே நடக்கு முன்பாகவே, அவள் சொல்லிக் கொண்டு தனது வீட்டிற்குக் கிளம்பினாள்.

கொஞ்சம் வெளியே இருண்டு போனதால், இவனது தங்கையை அவளுடன் ‘பாஸ் ஸ்டாப் வரை’ வரமுடியுமா என்று அவள் அழைத்தாள்.

தங்கை தனியே திரும்பி வரவேண்டுமே என்பதால் அவனையும் அவர்களுடன் துணைக்குப் போய்வரும்படி தாயார் சொன்னாள்.

அவளோடு காலமெல்லாம் துணையாய் போய்வரத்தான் அவன் விரும்பினான். அவளுக்குத் தெரியாமலே மனசுக்குள் அவளுக்காக ஒரு சிம்மாசனத்தைப் போட்டு அதிலே அவளை உட்கார வைத்திருந்தான்.

தாயார் சொன்னதும், தற்போதைக்குக் கிடைத்த இந்தச் சந்தர்ப்பமே போதும் என்று அவனும் அவர்களுடன் கிளம்பினான்.

கிளம்பும்போது அவளை முகத்திற்கு நேரே பார்த்து அவனால் ஒரு சிரிப்பு மட்டும் உதிர்க்க முடிந்தது.

அவளது முகத்தில் எதையோ இவனிடம் சொல்லத் தவிப்பது போன்ற பாவனையை இவன் அவதானித்தான்.

ஆனாலும் என்னிடம் சொல்ல அவளுக்கு என்ன இருக்கிறது என்ற அலட்சியப் போக்கால் அதை அசட்டை செய்தான்.

பஸ்ஸிற்குக் காத்திருந்தபோதுகூட, அவளுடன் பேசுவதற்கு  இவனுக்கு நிறையச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனாலும் கிடைத்த சந்தர்ப்பத்தை சாதுர்யமாய்ப் பயன்படுத்த இவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.

பஸ் வண்டி வந்ததும், அதில் ஏறிச் செல்ல மனமில்லாமல், அவள் இருவருக்கும் சேர்த்து, கையசைத்து பாய் சொல்லிப் பிரிந்தபோது இவனது நெஞ்சம் எதையோ இழந்து விட்ட பிரிவித்துயரில் என்றுமே இல்லாதவாறு கனத்து விம்மியது.

‘இப்படி ஒரு நல்ல ஃபிரென்ட் உனக்கு இருப்பதாக எனக்கு நீ சொல்லவே இல்லையே!’ என்று திரும்பி வீடு வரும்போது தங்கைமீது திடீர்பாசம் கொண்டவன்போல, இயலாமையின் வெளிப்பாடாய்க் குற்றம் சுமத்தினான்.

‘இந்தக் குழையல் எல்லாம் எனக்கு வேண்டாம், இட்ஸ் டூ லேட்!’ என்று இவள் மனதுக்குள் கறுவிக்கொண்டாள்.

‘ரொம்ப நல்ல பெண்ணு, எங்களுக்குத்தான் கொடுத்து வைக்கவில்லை!’ என்று உணவு பரிமாறும் போது அம்மா பெருமூச்சு விட்டாள்.

இவன் உணவு அருந்துவதை விட்டுவிட்டு தாயை நிமிர்ந்து பார்த்தான்.

‘படி, படி என்ற சொன்னால் எப்போதாவது கேட்டியா, உன்னோட படித்தானே கோபி, ஞாபகமிருக்கா? அவன்தான் இவளைக் கட்டிக்கக் கேட்டானாம். இவளுக்குப் பிடிக்லையோ, என்னவோ, இவள் தன்னுடைய முடிவை இன்னும் சொல்லலையாம். அமெரிக்காவிலே எம்.பி.ஏ முடிச்சிட்டு, இந்த மாதமுடிவில் அவன் இங்கே வர்றானாம்!’ அம்மா திட்டித் தீர்த்தாள்.

அண்ணனைப்பற்றி ஆர்வமாய்ப் பல தடவைகள் அவள் தன்னிடம் விசாரித்ததையோ, அவனது பிறந்தநாளன்று அவனிடம் கொடுக்கும்படி ‘லவ் யூ’ என்று இதயத்தின் படம் வரைந்து வாழ்த்து மடல் கொடுத்ததையோ, ‘காற்றடித்தும் கலையாத உன் முடிக்குள் என் விரல் நுழைத்துக் கலைத்திட ஆசை’ என்று கவிதை எழுதிக் கொடுத்ததையோ  அண்ணன் மீது கொண்ட கோபத்தால் அவற்றை எல்லாம் தான் கிழித்துப் போட்டதையோ, இவள் வாய்திறந்து கடைசிவரை இவனிடம் சொல்லவே இல்லை!

‘எலியும் பூனையும்’ என்று அம்மா இவர்கள் இருவரையும் அடிக்கடி சொல்வதில் ஏதாவது அர்த்தமிருந்திருக்கலாம்!

*********************************************************

( வணக்கம். இந்தக் கதையை மறுபிரசுரம் செய்யவோ அல்லது மொழி மாற்றம் செய்யவோ விரும்பினால் கதாசிரியர் குரு அரவிந்தன்
அவர்களின் பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும்.
kuruaravinthan@hotmail.com
தேவையாயின் மேற்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்குத் தொடர்பு கொள்ளவும்.)


**********************************************************


 குரு அரவிந்தன் - வாழிய! வாழியவே!

கனடாத் தமிழர் இலக்கிய வானில்
சுடரும் குருஅர விந்தனே வாழ்க!
தமிழர் இலக்கியப் பிரிவுகள் அனைத்தும்
உனது இலக்கியப் பணியும் தொடர்கவே!

-கவிஞர் வ.ந.கிரிதரன்-
கண்களின் வார்த்தை புரியாதோ..?- Valentineகாதலர்தினக் கதை

கண்களின் வார்த்தை புரியாதோ..?


கண்களின் வார்த்தை புரியாதோ..?- Valentine

குரு அரவிந்தன்

வளுடைய அந்தச் சிரிப்பில் ஏதோ ஒரு வித கவர்ச்சி இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால் அது என்னை ஒரு கணம் நிலை குலைய வைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

நான் என்னை மறந்து அவளைப் பார்த்தேன். அவளோ ஒரு கண்ணசைவோடு என்னைக் கடந்து மெதுவாகச் சென்றாள்.

அதுவே எனக்குள் ஏதோ நுழைந்து விட்ட உணர்வை ஏற்படுத்தி என்னைக் குளிரவைத்தது. அவள் என்னை அசட்டை செய்தாளா அல்லது என்னை ஏங்க வைத்தாளா என்பது அப்போது எனக்குப் புரியவில்லை.

வீட்டிற்கு வந்து படுக்கைக்குச் சென்ற போதும் அவள் நிiவாகவே இருந்தது. அவளது புன்னகையும், கண்ணசைவும் அடிக்கடி மனக்கண் முன்னே வந்து போனது. அந்தக் கணம்தான் அவள் நினைவாக என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பது புரிந்தது.

உண்மைதான், அவள் என்னை ஏங்க வைத்திருக்கிறாள் என்பதை என்னால் நம்ப முடியாமல் இருந்தது.

நானுண்டு என்பாடுண்டு என்று தான் இது வரை காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். இன்று மட்டும் ஏன் இந்த மயக்கம் என்பது தெரியவில்லை.

ஒருவேளை பிறந்த மண்ணின் வாசனை என்னை எதிலும் ஈடுபாடு கொள்ள விடாமல் இதுவரை தடுத்து வைத்திருந்திருக்கலாம்.

அல்லது எனது பெற்றோர் அடிக்கடி தந்த போதனை என்னைப் பெண்கள் பக்கம் திரும்பாமல் தடுத்திருக்கலாம். ஆனாலும் காலவோட்டத்தில் எனது பதுமவயதைப் பல்லைக் கடித்துக் கொண்டு எப்படியோ ஓட்டியாகி விட்டது.
இனியும் இந்த உடம்பும் மனசும் பொறுமையாக இருக்குமா என்பதில் எனக்குள் சந்தேகம் இருந்தது. புலம் பொயர்ந்த இந்த மண்ணின் சூழ்நிலை அடிக்கடி மனதைச் சஞ்சலப் படுத்தியது.

மதில் மேல் பூனைபோல இதுவரை தவிப்போடு இருந்த மனசு மறுபக்கம் தாவிக் குதித்துவிடு என்று அடிக்கடி ஆசை காட்டியது. வீட்டிலும், உறவுகளிடமும் ஒரு முகத்தைக் காட்டி, வெளியே மற்றவர்களிடம் மறு முகத்தைக் காட்டி எத்தனை நாட்கள்தான் ஆசைகளை எல்லாம் துறந்தவன் போல, இப்படி நடிப்பது.

என் வயதை ஒத்தவர்களைப் பார்க்கும் போது, இயற்கையின் தேடலுக்கு நான் மட்டும் விதிவிலக்கா என்ற கேள்வி எனக்குள் எழுந்து கொண்டேயிருந்தது. 

இளமை துள்ளுமா? அதைத்தான் அவளிடம் நான் அன்று கண்டேன்.

பொன்னிறத்தில் முழப்பாவாடை சட்டை அணிந்து, குருத்துப் பச்சை அரைத்தாவணியில் அவள் அழகாகாக இருந்தாள்.

ரொறன்ரோவில் நடந்த தமிழ் மரபுத் திங்கள் விழாவிற்குத் தன்னார்வத் தொண்டராக நான் சென்றிருந்த போதுதான் அங்கே அவளைக் கண்டேன். ரொறன்ரோவில் உள்ள பிரபல நடன ஆசிரியை ஒருவரின் நடனக் குழுவில் அவளும் இடம் பெற்றிருந்தாள்.

பண்பாடு, கலாச்சாரத்தை மறந்து எங்கேயோ போய்க் கொண்டிருந்த தமிழ் சமுதாயத்தைப் புலம் பெயர்ந்த இந்த மண்ணில் பிடித்திழுத்து நிறுத்தியிருந்தது இந்த தமிழ் மரபுத் திங்கள்.

ஆமாம், கடந்த சில வருடங்களாக என்னைப் போன்ற இளம் தலைமுறைக்கு இந்த மரபுத்திங்கள் கொண்டாட்டம் எங்கள் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் உணர்த்துவதாகவே இருக்கின்றது.

ஆர்வத்தோடு பல பகுதிகளில் இருந்தும் இளம் தலைமுறையினர் பங்கு பற்றுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

இளைஞர்கள் பட்டு வேட்டி, சட்டை, சால்வையில் கம்பீர நடைபோட, பதுமவயதுப் பெண்கள் பாவாடை சட்டை அரைத்தாவணியில் அழகு நடை நடந்து செல்ல அந்த மண்டபமே பண்பாட்டுக் கோலம் போட்ட சொர்க்கமாய்த் தோன்றயது.

இடைவேளையின் போது உணவகத்தில் சர்க்கரைப் பொங்கல், வடை, சுண்டல் எல்லாம் இலவசமாகக் கிடைத்தது.

அப்போது அவளும் தோழிகளுடன் அங்கே உட்கார்ந்திருந்தாள். அவளது இடத்திற்கு நானாகவே சென்று அவளது நடனத்தைப் புகழ்ந்து பாராட்டினேன். அவள் வெட்கப்பட்டு ‘தாங்ஸ்’ என்று சொல்லி விட்டுத் தோழிகளுடன் ஓடிமறைந்தாள்.

மீண்டும் ஒரு கிராமிய நடனத்தில் அவள் பங்கு பற்றியிருந்தாள். சுளகுடன் வந்து நடனமாடிய போது அசல் கிராமத்தவள் போலவே இருந்தாள். விழா முடியும் போது அவளை மீண்டும் பாராட்டினேன்.

‘நடனத்தில் ஆர்வம் இருக்கிறதா’ என்று கேட்டாள், இருக்கிறதோ இல்லையோ ‘ஓம்’ என்று பதில் சொன்னேன்.

இனிய புன்னகையோடு எங்கள் செல்பேசி எண்களைப் பரிமாறிக் கொண்டோம். அதன் பின் செல்பேசியின் துணையுடன் ஒருவரை ஒருவர் நெருங்கி வந்தோம். செல்பி எடுத்துக் கொண்டோம்.

ஒரு வாரத்தின் பின் நடன நிகழ்ச்சி ஒன்று இருப்பதாகவும் அதற்கு வர முடியுமா என்றும் அவள் கேட்டிருந்தாள்.

அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தாலும் அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. தனியே அவள் நடனமாடப்போதாகச் சொன்னாள்.

ஏனோ எனக்கு அது பிடிக்கவில்லை, அவளிடம் சொல்லாமலே திரும்பி வந்திருந்தேன். மறுநாள் இருவரும் சந்தித்தபோது அவள் கேட்டாள்,
‘நடனம் முடிஞ்சதும் ஓடி வந்தேன், ஆனால் உன்னைக் காணவில்லை, ஏன் போய்விட்டாய், சொல்லி விட்டுப் போயிருக்கலாமே.’

நான் எதுவும் பேசவில்லை, மௌனமாக இருந்தேன்.

‘ஏன் உனக்கு அந்த நடனம் பிடிக்கலையா?’ எனது முகபாவத்தை அவள் கவனித்திருக்க வேண்டும், அவளாகவே கேட்டாள்.

‘ஆமா..!’ கொஞ்சம் உரக்கவே சொன்னேன்.

‘உனக்கு நடனம் பிடிக்கும் என்றுதான் நான் நினைத்தேன். அதனால்தான் உன்னையும் அங்கே வரச் சொன்னேன்.’

‘ஆமா எனக்கு நடனம் பிடிக்கும்தான், ஆனால் இப்பிடிக் கூத்தடிக்கிறதல்ல!’

‘ஏன் எனன்னாச்சு உனக்கு, ஏன் அப்பிடி சொல்கிறாய்?’

‘வேற எப்படிச் சொல்லுறது, எனக்குப் பிடிக்கவே இல்லை. நீ நடனம் ஆடினபோது உன்னைச் சுற்றி இருந்தவங்களைக் கவனிச்சியா?’

‘இல்லையே, நான் என்னையே மறந்துதானே ஆட்டத்தில் மூழ்கிப் போகிறேன்’

‘தெரியும் உன்னை மறந்து நீ மூழ்கிப் போய் நடனம் ஆடினதால, சுற்றி இருந்தவங்களும் அப்போ முத்துக் குளிச்சாங்க தெரியுமா?’

‘என்ன சொல்லுறாய்?’

‘நான் சொன்னால் நம்பமாட்டாய், இப்போ இதைப்பார்’

எனது செல்போனை அவளின் கையில் திணித்தேன்.

செல்போன் திரையில் அவள் பார்த்த காட்சி அவளையே நம்பமுடியாமல் ஒரு கணம் கண்களை மூடவைத்தது.

‘என்ன இது?’ என்றாள்.

‘அவள் சுடிதாரோடு கைகளை மேலே தூக்குவதும், மெதுவாகக் கைகளை இறக்கி பின்னால் கைகளை கட்டுவதும் பாடலுக்கு ஏற்ப மாறிமாறிச் செய்து கொண்டிருந்தாள். அவள் நடுவிலே தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கச் சுற்றிவர வேட்டை நாய்கள் போல நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு சிலர் வெறித்த பார்வையோடு அதை ரசித்துக் கொண்டிருந்தனர்.’

‘அவர்களது பார்வையைப் பார்த்தால் உனது நடனத்தை அவர்கள் ரசித்தது போல எனக்குத் தெரியவில்லை. இதைத்தான் நீ நடனம் என்று சொல்லுறியா?’

‘இல்லை இது எங்க ரீச்சருக்குத் தெரியாது, ஒரு பாடலுக்கு ஆடச்சொல்லி அம்மாவின் சினேகிதி கேட்டதால அம்மா தான் என்னைக் கூட்டிக் கொண்டு வந்தவா, மேடையில் தான் ஆடுவதாக இருந்தது. இப்படி ஆண்கள் சுற்றி இருக்க நடுவிலே நின்று ஆடவேண்டி வரும் என்று நான் நினைக்க வில்லை.’

‘இப்படியான ஒரு கும்பலுக்கு நடுவே நின்று ஆடமாட்டேன் என்று நீ மறுத்திருக்கலாமே’

எதுவும் சொல்லாமல் தலை குனிந்தவள் ‘என்னுடைய சினேகிதிகளும் இதைத்தான் சொன்னார்கள்’ என்றாள்.

‘பரதநாட்டியக் கலைக்கே இதனாலே இழுக்கைத் தேடித்தராதே, நீ நல்லதொரு நாட்டிய தாரகை, தயவு செய்து இப்படியான இடங்களுக்கு நடனமாடப் போகாதே!’

அவள் மீதும், பரதநாட்டியக் கலை மீதும் மதிப்பு இருந்ததால், அவன் தனது எண்ணத்தை மனம் திறந்து சொன்னான்.

பரதநாட்டியம் என்பது ஒரு தெய்வீகக் கலை மட்டுமல்ல, ஒரு பண்பாட்டு அடையாளம். அதைப் பக்தியோடுதான் அணுக வேண்டுமே தவிர வெறியோடு அல்ல. கல்லிலேதான் சிலை வடிக்கப்படுகின்றது. கோயிலிலே இருந்தால் தான் அது பூஜிக்கப்படும் இல்லாவிட்டால், வீதியிலே கிடந்தால் அது வெறும் கல்தான், அப்படித்தான் இந்தக் கலையும், புரியுதா?’

அவன் சொல்ல அவள் ‘புரிகிறது’ என்பது போலப் புன்கையோடு விழி அசைத்தவள், மன்னித்துவிடு என்பது போலப் பார்த்தாள்.

அவளது கண்களின் வார்த்தை அவனுக்குப் புரிந்திருக்கும்.

ஆனாலும் அவன் எங்கோ பார்ப்பது போலப் பார்த்தான்.

அவள் அவனது கையை எடுத்துத் தனது உள்ளங்கையில் பதித்தாள்,
இதமான அவளது அந்தச் சூட்டில் பனிக்கட்டியாய் அவன் மெல்ல உருகத் தொடங்கினான்.

காதலுக்குக் கொஞ்சம் ஊடலும் தேவைதானே!


இதயத்தைத் தொட்டவள்..! - Valentine Storyஇதயத்தைத் தொட்டவள்..! 

இதயத்தைத் தொட்டவள்..!  - Valentine Story


குரு அரவிந்தன்


ஏதோ ஒன்று, அவனது இதயத்தை மெல்ல வருடியதால், முன்வரிசையில் உட்கார்ந்து தூங்கிவழிந்து கொண்டிருந்த தினேஷ் திடுக்கிட்டு விழித்துப் பார்த்;தான்.

கானக்குயில் ஒன்று மேடையில் கீதமிசைத்துக் கொண்டிருந்தது.
இது கனவல்ல நிஜம்தான் என்பது, அந்த அழகு மயில் அங்குமிங்கும் மெல்ல அசைந்து கொண்டிருந்ததில் அவனுக்குப் புரிந்தது.

சற்று முன்வரை அலட்சியமாய் மேடைப் பாடல்களைக் கேட்டுச் சலித்துப் போயிருந்த அவனது இதையத்தை உறையச் செய்தது தென்றலில் மிதந்து இதயத்தில் தேனாய்க் கலந்த அவளது குரலா? அல்லது கண்ணில் காட்சியாத் தெரிந்த அவளது இயற்கையான அழகா என்பது புரியவில்லை!

அவனுக்கு இதில் எது என்று புரியாத தடுமாற்றம்.

திடீரென விழித்துக் கொண்டதால், தன்னைச் சமாளித்துக் கொண்டு உசார் நிலையில் உட்கார்ந்து அவளது அந்தப் பாடலைக் கவனமாகச் செவிமடுத்தான்.

இதற்கு முதல் வந்து மேடையில் பாடியவர்களின் பாடல்கள் எந்த விதத்திலும் அவனைக் கவரவில்லை. தாலாட்டுப் பாடுவதுபோல இருந்ததால் எழுந்து போய்விடலாமோ என்றுகூட ஒரு சமயம் நினைத்தான்.

பாட்டை அருகே இருந்து ரசித்துக் கேட்கவேண்டும் என்று ஆசைப்பட்டு முதல் வரிசையில் உட்காருவதில் உள்ள பிரச்சனையே இதுதான். நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்றால், பாதிவேளையில் எழுந்து செல்லும்போது எல்லோரும் இவனை வேடிக்கை பார்ப்பார்களோ என்ற தயக்கம் எப்பொழுதும் மனதில் இருந்தது.

மேடைப்பாடகர்கள் சிலர் ரசிகர்களைப் பற்றிக் கவலைப்படுவதே இல்லை. எதைத் தாங்கள் பாடினாலும் ரசிகர்கள் பொறுமையாய் இருந்து கேட்பார்கள் என்ற தப்பான எண்ணம் அவர்களுக்கிடையே இருந்திருக்கலாம்.

உண்மையிலேயே எப்படியான ரசிகர்கள் அங்கே இருக்கிறார்கள் என்று அந்த ரசிகர்களின் நாடி பிடித்துப் பார்த்து அவர்களைக் கவரக்கூடிய விதத்தில் பாடுபவர்கள்தான் வெகுவிரைவில் பிரபல்யமாகிறார்கள்.

அவர்கள்தான் தங்களுக்கென ரசிகர்களை உருவாக்கிக் கொள்கிறார்கள்.
எத்தனை மேடைகளில் இவளைப்போல எத்தனை பாடகிகளை இவன் பார்த்திருக்கிறான். அனேகமாக விலை உயர்ந்த சுடிதார் அணிந்து அழகுராணி போட்டியில் பங்குபற்றுவது போல, ஒலி வாங்கியைக் கையில் பிடித்துக் கொண்டு மேடையில் அசைந்து கொண்டு நின்றார்களே தவிர, இசையில் தங்கள் திறமையைக் காட்ட ஒருபோதும் அவர்கள் முனையவில்லை.

இன்றுமட்டும் ஏன் இந்தக் குழப்பம்? இவள் வித்தியாசமாய் இருந்தாள், இசைக்கேற்ப அசைந்தாள். இவளிடம் அவனைக் கவரக்கூடிய என்வென்று சொல்லமுடியாத ஏதோ ஒருவித கவர்ச்சி இருப்பதை மட்டும் புரிந்து கொண்டான்.

அவளோ ரசிகர்களுக்குப் பிடித்தமான, அப்போது பிரபல்யமான சில பாடல்களைத் தெரிந்தெடுத்து அவர்களின் ரசனைக்கேற்ப, நாடி பிடித்துப் பார்த்து, மேடையில் பாடிக் கொண்டிருந்தாள். அவனும் ஒரு பாடகன் என்பதால் அவள் தேர்ந்தெடுத்த பாடல்கள் எல்லாமே அவனுக்கும் பிடித்திருந்தன.

அவள் மேடையில் பாட, இவன் இங்கே வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டு பாடலோடு ஒன்றிப் போயிருந்தான். அவ்வப்போது அவனை அறியாமலே அவனது கைகள் தாளம் போட்டன.

விழிகளும் நடனமாடுமா? நடனமாடும் என்பதை அப்போதுதான் அந்த மேடையில் அவளிடம் அவதானித்தான். அவ்வப்போது பாடலுக்கேற்ப அவள் மெல்ல அசைந்து கொண்டிருந்தாள். அவளுடைய அந்த மெல்லிய அசைவுகளுக்கேற்ப அழகிய விழிகளும் அசைந்து ரசிகர்களிடம் கதைகள் பலபேசின.

ஒவ்வொரு அசைவின்போதும் மெல்லிய சுகந்தம் காற்றோடு கலந்து அவனைத் தேடிவந்து தொடுவதுபோல இவன் உணர்ச்சி வசப்பட்டான். அதைச் சமாளிக்க, தன்னை ஆசுவாசப்படுத்தி, சுவாசத்தை உள்ளே நன்றாக இழுத்து விட்டான். தன்னை மறந்து, தன்னையே அவள் தளுவியது போன்ற உணர்வில் மனதுக்குள் பரவசப்பட்டான்.

‘முதல் முதல் பார்த்தேன் உன்னை..
முழுவதும் இழந்தேன் என்னை..!’ 

இனிய கீதம் ஒன்று அவனைத் தொட்டதும் அவன் சிலிர்த்தான். எல்லா ரசிகர்களைப் போலவும், என்றுமில்லாத ஒரு இனிய உணர்வில் அவனும்; மிதந்தான். அருகே இருந்தவரிடம் அவளின் பெயரைக் கேட்டு அறிந்து கொண்டான்.

‘திவாணி..!’ அவளைப் போலவே அழகான பெயர்.

தனக்காகவே அந்தப் பாடலைத் தெரிவு செய்து திவாணி பாடியிருப்பாளோ என்ற நினைப்பில் அப்படியே ரசித்துக் கொண்டு அதற்குள்ளே மூழ்கிப் போயிருந்தான். அவ்வப்போது பாடலுக்கு நடுவே இசை வெள்ளம் புரண்டபோது, கையிலே வைத்திருந்த ஒலி வாங்கியை அவள் மார்புக்கு நேரே நிறுத்தி தனது விழிகளால் சபையோரை தளுவிப் புன்னகைத்தாள்.
தன்னையே அவள் பார்த்துப் புன்னகைப்பது போல, முன் வரிசையில் உட்கார்ந்திருந்த இவன், அவள் பார்வை படும்போதெல்லாம் மெய்சிலிர்த்தான். பாடல் முடிந்து அவள் மேடையை விட்டு இறங்கி வந்தபோது இவன் அருகே சென்று தனக்குப் பிடித்த அந்தப் பாடலைப் பாடியதற்காக அவளை மனதாரப் புகழ்ந்தான்.

யார்தான் புகழை விரும்பமாட்டார்கள்!

‘தாங்யூ’ என்றாள் அவள் இனிய குரலில்.

நிறையப் பேசவேண்டும்போல இருந்தாலும் அவளது தாயார், பாதுகாப்பதிகாரி போல அவளுக்கு அருகே விறைப்பாக நின்றதால் மேற்கொண்டு அவனால் பேசமுடியவில்லை.

‘தாங்யூ’ என்று அவள் ஒரு வார்த்தை திருப்பிச் சொன்னதிலேயே அவன் மனம் நிறைந்து போயிருந்தான்.

வீட்டிற்குத் திரும்பிப் போகும்போது அவள் பாடிய அந்தப் பாடலை அவனும் முணுமுணுத்தான். எதையோ இழந்துவிட்ட உணர்வில் ஓவ்வொரு வரிகளையும் உணர்ந்து பாடினான். அவளும் அவனைப் போலவே மனதில் எதையாவது நினைத்துக் கொண்டு பாடியிருப்பாளோ?

அதன்பின் அவளது நிகழ்ச்சிகள் நடந்த இடமெல்லாம் இவனும் தேடிச் செல்லத் தொடங்கினான். அவ்வப்போது அவள் அவனைப் பார்த்துப் புன்னகை சிந்துவாள். இவன் தனக்குள் மகிழ்ந்து போவான்.

ஓரு நாள் அவள் பாடிவிட்டு மேடையில் இருந்து இறங்கி வரவே, அவன் எதிரே சென்று மலர்க் கொத்து ஒன்றைக் அவளுக்குக் கொடுத்தான்.

‘என்ன இது..?’ திவாணி செல்லமாய் சிணுங்கினாள்.

‘நான் உங்க ரசிகன், நல்ல நட்பிற்கு மலர்தான் அடையாளம், அதுதான் வாங்கி வந்தேன்! மறுக்காதீங்க.. பிளீஸ்..!’ என்றான் தினேஷ்.

‘உங்களுக்கு ஏன் வீண்சிரமம்!’ அவள் சற்றுத் தயங்கவே சட்டென்று மலர்க்கொத்தை அவளது கைகளில் திணித்தான்.

அவளால் அதை மறுக்க முடியவில்லை.


‘தாங்யூ..!’ அக்கம் பக்கம் பார்த்துவிட்டு அவன் நீட்டிய மலர்க் கொத்தைப் மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டாள்.

அவனோ சந்தோஷம் தாங்கமுடியாமல், மனசெல்லாம் கிளுகிளுக்க வீட்டிற்குச் சென்றான். வீட்டிற்குச் சென்றானா, செட்டைகட்டிப் பறந்தானா என்பதுகூட அவனுக்குத் தெரியவில்லை.

மலர்ச் செண்டை மட்டுமல்ல, தனது இதயத்தையும் அவளிடம் பறி கொடுத்துவிட்டது போன்ற உணர்வில் அன்று முழுவதும் மிதந்தான்.
அவ்வப்போது இவன் அவளை வாழ்த்துவதும், அவள் பதிலுக்கு நன்றி சொல்வதும் ஒரு சம்பிரதாயம் போல அவர்களுக்கிடையே தொடர்ந்தது. இவனும் ஒரு பாடகன் என்பதை அறிந்த அவள் அவனை வாழ்த்துவதும் அவன் நன்றி சொல்வதுமாகத் தொடர்ந்த அவர்களின் தொடர்கதையில், திடீரெனப் பாதைமாறியது.

‘தம்பி சொல்லுறன் என்று குறைநினைக்காதையுங்கோ, எங்களுக்கு மானம்தான் பெரிது. அவள் பெரிய இடத்தில கலியாணம் கட்டி வாழப்போகிறவள். இனிமேல் இப்படி வந்து கதைக்கிறதை நீங்கள் நிறுத்திக் கொண்டால் நல்லது!’

அவன் இதைச் சற்றும் எதிர்பார்க்காததால் ஒரு கணம் அதிர்ந்து நின்றான்.
‘அம்மா என்னம்மா..? இப்படி மரியாதை இல்லாமல்..!’ திவாணி தயக்கத்தோடு சொல்லி முடிக்க முன்பாகவே, திவாணியை முறைத்துப் பார்த்த தாயாரின் குரல் உயர்ந்தது.

‘திவாணி நீ பேசாமல் இரு, கண்டவங்களோட எல்லாம் கதைச்சு மானத்தை வாங்காதை. நீ உயர உயரப் பறக்க வேண்டியவள். இவனோட இனிமேல் கதைக்கிறதை விட்டிடு!’ தாயார் அவளின் கையைப்பிடித்துத் தறதறவென்று அந்த இடத்தைவிட்டு இழுத்துச் சென்றாள்.

திவாணியின் தாயார் முகத்தில் அறைந்தது போல நேரடியாகவே அவனிடம் சொல்லிவிட்டு, திவாணியை இழுத்துச் சென்றபோது, திவாணி தாயாரை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாமல் மௌனமானாள்.

அவளது கண்கள் மட்டும் பனித்திருந்ததை தினேஷ் அவதானித்தான்.
வீட்டிற்குத் திரும்பி வந்த தினேஷ், எதையோ பறிகொடுத்தது போல மனமுடைந்து போனான். ஒரு பெண்னோடு பேசிப் பழகுவது தப்பா? அப்படிப் பழகும்போது பெண்ணைப் பெற்றவர்கள் ஏன் தப்பான பார்வையில் பார்க்கிறார்கள்?

இனிய நட்புத் தொடரும்போது நந்திபோல தாயார் ஏன் குறுக்கிடுகிறாள் என்பது அவனுக்குப் புரியாத புதிராய் இருந்தது. பதில் தெரியாக் கேள்விகளோடு, திவாணியின் தாயாரைத் திட்டித் தீர்த்துக் கொண்டு படுக்கைக்குச் சென்றான்.

நல்ல நட்புத்தான் சூழ்நிலையும் சந்தர்ப்பமும் கிடைத்தால் காதலாய்ப் பரிணமிக்கிறது என்பதும் அவனுக்குத் தெரியும். படுக்கையோ நொந்தது, எதையோ திடீரெனப் பறிகொடுத்து விட்டது போல அன்றிரவு முழுவதும் தூக்கமின்றித் தவித்தான்.

அதன்பின் திவாணியை அவன் காணவில்லை. எங்கோ எல்லாம் அவளைப் பற்றி விசாரித்தான். அவர்கள் ஊரைவிட்டுப் போய்விட்டதாக சொன்னார்கள்.

‘சிகரத்தைத் தொடவேண்டும் என்றால் நீயும் ஒரு சிறந்த பாடகனாக வரவேண்டும். உனக்கு நல்ல குரல் வளம் இருக்கிறது. முயற்சி செய்தால் கட்டாயம் உன்னால் உயரப்பறக்க முடியும் தினேஷ்!’ என்று நண்பன் புத்திமதி சொன்னான்.

தினேஷ_ம் நண்பனின் புத்திமதியை ஏற்று இரு குரலில் பாடப் பயிற்சி பெற்றான். மிகப்பழைய பாடல் ஒன்றைத் தெரிவு செய்து அதையே இருகுரலில் பாடிப் பயிற்சி பெற்றான்.

வளையாபதி படத்தில் இடம் பெற்ற ‘குலுங்கிடும் பூவிலெல்லம் தேனருவி’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பாடலைத்தான் அவன் முதலில் தெரிவு செய்திருந்தான்.

திவாணியை நினைத்து அன்று மேடையில் அவனே ஆண் குரலிலும், பெண்குரலிலும் ஒரே பாடலை மாறிமாறிப் பாடியபோது ரசிகர்களின் கரகோஷம் வானத்தையே தொட்டது. கண்களை மூடி இசையை ரசித்தவர்கள் அவனுடன் ஒரு பெண்ணும் சேர்ந்து பாடியதாகத்தான் நினைத்தார்கள்.

வானத்து நட்சத்திரங்களாகப் பிரகாசிக்க வேண்டுமானால், உண்மையான திறமைகள் வெளிவரும் போதுதானே, ரசிகர்களைத் தானாகவே உருவாக்கி, வானத்து நட்சத்திரங்களாகப் பிரகாசிக்க முடியும்.

அவர்கள் கொடுத்த ஆதரவு, அவனால் ‘இன்னும் முடியும்’ என்ற நம்பிக்கையை அவனுக்குள் ஏற்படுத்தியது.

திவாணியின் புகழ் பரவியது போலவே, இருகுரல் மன்னன் என்று தினேஷின் புகழும் வேகமாகப் பரவத் தொடங்கியது. புகழ் பரவிதாலோ என்னவோ, தினேஷின் பாடலைக் கேட்ட, பிரபல இசையமைப்பாளர் ஒருவர் தினேஷை தனக்காக, தன்னுடைய இசையமைப்பில் ஒருபாடல் பாடும்படி அழைத்திருந்தார்.

தினேஷ_ம் அவர் விருப்பப்படியே ஆண்குரலில் அந்தப் பாடலைப் பாடியிருந்தான். பாடல் வெளிவந்தபோது அவனால் நம்பமுடியாமல் இருந்தது. அவனுடைய குரலோடு ஒரு பெண்குரலும் இணைந்திருந்தது. நிச்சயமாக அது திவாணியின் குரல்தான் என்பது அவனுக்குப் புரிந்தது.
திவாணியின் குரலும் அந்தப் பாடலில் இணைந்திருந்ததால் திரும்பத் திரும்ப அந்தப் பாடலைப் போட்டுக் கேட்டான்.

உன்னைச் சரணடைந்தேன்..
உன்னுள்ளே நான் பிறந்தேன்!’

ராஜா - ஜிக்கி ஜோடிபோல மீண்டும் ஒரு இளம் ஜோடி  தினேஷ் - திவாணி என்று எங்கும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பத்திரிகைகள் எல்லாம் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகப் புகழ்ந்து பாராட்டின.

ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், பாடல் ஒலிப்பதிவான போது கூட அவன் திவாணியைச் சந்திக்கவில்லை. ஒவ்வொரு முறையும் அந்தப் பாடலைக் கேட்கும்போது திவாணி அவன் மனதில் நிழலாடினாள்.

அவன் உள்ளத்தில் குடியிருந்த திவாணியைப் பற்றிச் சிந்தித்துப் பார்த்தான்.

அவளுக்குத் திருமணமாகி இருக்குமா? என்னைக் கண்டால் பேசுவாளா?

இப்படிப் பலதையும் நினைத்து, எந்த முடிவும் எடுக்க முடியாமல் யோசனையில் ஆழ்ந்தபடி படுத்திருந்தான்.
தொலைபேசி கிணுகிணுத்தது.

‘ஹலோ..!’ என்றான்.

‘தினேஷ்.. நீங்களா..?’ இதயத்தை வருடியது மறுபக்கம்.

‘திவாணி..!’ தன்னை மறந்து கத்தினான்.

‘என்னை ஞாபகம் இருக்கா தினேஷ்..?’

‘என்ன திவாணி அப்படி சொல்லிவிட்டாய்? மறந்தால்தானே நினைப்பதற்கு! நீ எப்படி இருக்கிறாய்?’

‘நல்லாய் இருக்கேன்! நீங்க எப்படி இருக்கிறீங்க?’

‘ஏதோ, உயிரோடு இருக்கிறேன்..!’ என்றான் தினேஷ்.

‘ஏன் அப்படி விரக்தியோடு பேசிறீங்க..?’

நீ இல்லாத உலகில் நான் நடைபிணம்தான்! சட்டென்று பதில் சொல்ல நினைத்தாலும், அவன் சொல்லவில்லை.

‘என்ன தினேஷ் மௌனமாகிவிட்டீங்க, உங்ககூட நான் கொஞ்சம் பேசணும். எங்க வீட்டிற்கு வருவீங்களா?’ கெஞ்சுவது போலக் கேட்டாள்.

முகவரி கேட்டான்.

நீண்ட நாட்களின்பின் சந்திக்கப் போகிறோம் என்பதால் அவன் விலையுயர்ந்த ஆர்க்கிட் மலர்க்கொத்து ஒன்றை அவளுக்காக வாங்கிச் சென்றான்.

வாசற்கதவை அவள்தான் திறந்தாள்.

அவன் உள்ளே வந்து கதவை மூடி, பாத அணியை அகற்றிவிட்டு மலர்க்கொத்தை அவளிடம் நீட்டினான். முன்பு பார்த்ததைவிட அவள் மேலும் அழகாக இருந்தாள்.

அவளது தாயாரின் படம் மாலைபோட்டபடி சுவரில் தொங்குவதை அவதானித்தான்.

அவள் மலர்க்கொத்தைப் பெற்றுக் கொள்ளாமல், கைகளைக் கட்டிக் கொண்டு அவனை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்தாள்.

அந்தப் பார்வையில் இவன் ஒருகணம் குழம்பிப்போனான்.

‘என்ன திவாணி இப்படிப் பார்க்கிறாய்?’

‘உங்களுக்கு இந்தப் பூவைத்தவிர வேறு எதுவுமே கொடுக்கத் தெரியாதா?’ வாய்விட்டுக் கேட்டாள்.

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பது அவனுக்கு முதலில் புரியவில்லை. அவளது விழிகளில் ஆவலோடு பதிலைத் தேடினான்.

‘இன்னும் புரியலையா? நானும் தனிமையில் தவிக்கிறேன்’ என்பதுபோல அவள் விழிகளை உயர்த்தி அவனை ஏக்கத்தோடு பார்த்தாள்.

உண்மையாவா?

ஏதோ புரிந்தது போல அவனது கைகள் அவனை அறியாமலே விரிந்தன.
அதற்காகவே காத்திருந்ததுபோல அவள் அந்தக் கைகளின் அரவணைப்பில் நுழைந்து அவனது பரந்த மார்பில் முகம்புதைத்து விம்மினாள்.

மனதில் உள்ள பாரத்தை அழுதால்தான் அவளால் இறக்கி வைக்க முடியும் என்று நினைத்து சிறிது நேரம் அப்படியே மௌனமாக நின்றான் தினேஷ்.

‘என்ன திவாணி..? ஏன் அழுகிறாய்..?’ அவளது தலையை வருடியபடி சற்றுப் பொறுத்துக் கேட்டான் தினேஷ்.

‘அழலை, இது ஆனந்தக் கண்ணீர், அம்மா இறந்தபின் நான் தனித்துப் போனேன், என்னதான் பணம் இருந்தாலும், என்னைப் புரிந்து கொண்ட ஒருவரின் இப்படியொரு அன்பான அணைப்புக்குத்தான் இத்தனை நாள் காத்திருந்தேன், அது நீங்கதான்!’ என்றாள் திவாணி.

‘உன்னைச் சரணடைந்தேன் 
உன்னுள்ளே நான் பிறந்தேன்
என்னில் உறைந்திருந்தேன்
உன்னுள்ளே நான் கரைந்தேன்’

அவர்களை அறியாமலே, அவர்களின் இதயத்தைக் கரைத்த வார்த்தைகள் இசையாய் வெளிப்பட, அவர்களை ஒன்றாய்ச் சேர்த்து வைத்த அந்தப் பாடலை அவர்களை அறியாமலே ‘உன்னைச்சரணடைந்தேன்’ என்று ஒரே நேரத்தில் இருவரும் மெல்ல முணுமுணுத்த படி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர்.

Thalir Magazine - 6th Year end - 2019 - தளிர்..தளிர்Thalir.. Thalir .. Thalir

கனடா தளிர் இதழின் ஆறாவது ஆண்டு விழா - 2019

Thalir Magazine - 6th Year end - 2019 - தளிர்..தளிர்


கனடாவில் இருந்து வெளிவரும் தளிர் இதழின் ஆறாவது ஆண்டு நிறைவு விழா சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவில் உள்ள குயின்ஸ் கலாச்சார மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இளம் தலைமுறையினருக்காக இவர்கள் நடத்திய இசை, நடனப்போட்டியான ‘சலங்கையும் சங்கீதமும்’ என்ற நிகழ்வின் இறுதிச் சுற்றும் நேற்றையதினம் வெகு சிறப்பாக அந்த மண்டபத்தில் நடை பெற்றது இந்த நிகழ்வில் பார்வையாளர்கள், பெற்றோர்கள் என மண்டபம் நிறைந்த கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், நடனக்கலைஞர்கள் என ஒரு விழாக்கோலம் பூண்ட மாபெரும் நிகழ்வு அரங்கேறியது.


Thalir Magazine - 6th Year end - 2019 - தளிர்..தளிர்

சலங்கையும் சங்கீதமும் இசை நடனப் போட்டியின் இறுதிச் சுற்றில் நடனத்தில் சிறந்த மூன்று பேரும், இசை நிகழ்ச்சிப்  பாடலில் சிறந்த மூன்று பேரும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான விருது மற்றும் தங்க பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். தளிர் இதழின் அட்டைப்பட நாயகியான இசையழகி தளிர் மகள் மயூரதி தேவதாஸ் அவர்களும் தளிர் குழுமத்தினால் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். பிரதம ஆசிரியர் சி. சிவமோகன், பேராசிரியர் இ. பாலசுந்தரம், குழுமத்தின் தலைவர் எஸ். கிருஸ்ணகோபால், கவிஞர் சுரேஸ் அகணி, வைத்தியகலாநிதி போல் ஜோசெப் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் ‘தளிர்’ இதழும் இந்த நிகழ்வின்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.


Thalir Magazine - 6th Year end - 2019 - தளிர்..தளிர்


பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் விசேட இதழை வெளியிட்டு வைத்து வெளியீட்டுரை நிகழ்த்தினார். அவரது உரையில் ‘கனடாவில் முத்தமிழ் விழாக்களுக்குச் சென்றிருக்கின்றேன், ஆனால் இன்றுதான் முத்தமிழ் வித்தகர்கள் கூடியிருக்கும் ஒரு சபையைக் காண்கிறேன். இயல், இசை, நாடகத்தில் புகழ் பெற்ற பல கலைஞர்கள் கலந்து கொண்டிருப்பது மட்டுமல்ல, சிலர் நடுவர்களாகவும் வந்து கலந்து கொண்டிருப்பது பெருமைக்குரியது. எமது மொழி பண்பாடு கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து இப்படியான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்த நண்பரும் தளிர் இதழின் ஆசிரியருமான சிவமோகனுக்கும், தளிர் குழுமத்தினருக்கும் இந்தப் பாராட்டு உரியது. இந்த மண்ணில் ஈழத்தமிழர்களின் சரித்திரம் ஆரம்பமாகிச் சுமார் 40 வருடங்களாகிவிட்டன.'

Thalir Magazine - 6th Year end - 2019 - தளிர்..தளிர்

'முதல் 10 வருடங்கள் குறைந்த அளவிலேயே தமிழர்கள் இந்த மண்ணில் வாழ்ந்ததால், எங்கள் மொழியை வளர்ப்பதில் அதிகம் ஈடுபாடு கொள்ளவில்லை, ஆனால் கடந்த 30 வருடங்களாக மொழி ஆர்வலர்கள் தமிழ் மொழி அழிந்து விடக்கூடாது என்பதில் கவனமாகச் செயற்படுகின்றார்கள். ரொறன்ரோ கல்விச் சபையில் ஒரு ஆசிரியராகவும் நான் கடமையாற்றுவதால், இங்கே பிறந்த இந்தப் பிள்ளைகளின் மொழி உணர்வை நான் பெரிதும்  பாராட்டுகின்றேன். இந்தப் பாராட்டு இந்தப் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் இது போன்ற தமிழ் இசை, கலைப் போட்டிகளை நடத்துபவர்களையும் சாரும்.'

Thalir Magazine - 6th Year end - 2019 - தளிர்..தளிர்


'சிலர் பணத்தைக் காட்டி வேண்டும் என்றே பிறமொழிகளை புகுத்தி எங்கள் மொழியின் வளர்ச்சியை உடைக்க நினைக்கிறார்கள். வேற்று மொழிகளை அறிந்திருப்பது நல்லதுதான், ஆனால் அதற்காக எங்கள் தாய் மொழியைப் புறக்கணிக்கக் கூடாது. மொழி அழிந்தால் நம் இனம் அழிந்துவிடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நல்ல சிறந்த தமிழ் பாடல்களைத் தெரிவு செய்து போட்டியில் பங்கு பற்றிய இளம் தலைமுறையைச் சேர்ந்த அனைவருக்கும், மற்றும் நடுவர்களாக வந்து இளம் தலைமுறையினருக்கு ஊக்கம் தந்தவர்களுக்கும், தன்னார்வத் தொட்டர்களுக்கும்  பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.’ என்று குரு அரவிந்தன் தனது வெளியீட்டு உரையில் குறிப்பிட்டிருந்தார்.

Thalir Magazine - 6th Year end - 2019 - தளிர்..தளிர்


இறுதியாக இடம் பெற்ற நன்றியுரையில் இந்நிகழ்வில் கலந்து கொண்ட, ஆதரவுதந்த அனைத்து உள்ளங்களுக்கும் தளிர் குழுமம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

கீழடி அகழாய்வு - KEELADI

                                                           
                                                      Keeladi- கீழடி அகழாய்வு


கீழடி அகழாய்வு - KEELADI

India in Space - இந்தியாவின் விண்வெளிப்பயணம்

                                                                    India in Space

India in Space - இந்தியாவின் விண்வெளிப்பயணம்

Green Land Ice Melting - கிறீன்லாந்து பனிமலைகள்


                                                       GreenLand - Ice Melting

Green Land Ice Melting - கிறீன்லாந்து பனிமலைகள்

Female Space Walk - விண்வெளியில் நடைபயிலும் பெண்கள்யார் அந்த தேவதை? - Valentine Storyகாதலுக்கு இந்தநாள்!    - Valentine Storyதங்கையின் அழகிய சினேகிதி - Valentine Storyகண்களின் வார்த்தை புரியாதோ..?- Valentineஇதயத்தைத் தொட்டவள்..!  - Valentine StoryThalir Magazine - 6th Year end - 2019 - தளிர்..தளிர்கீழடி அகழாய்வு - KEELADIIndia in Space - இந்தியாவின் விண்வெளிப்பயணம்Green Land Ice Melting - கிறீன்லாந்து பனிமலைகள்

Report "Kuru Aravinthan"

Are you sure you want to report this post for ?

Cancel
×